இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான வேதாந்தா குழுமம், செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தி போன்றவற்றில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி மையம் ஒன்றை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், தொலைக்காட்சிக்குத் தேவையான பாகங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளதாக ராயிடர்ஸ் கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், சீனாவிடம் ஏகோபத்தியமாக உள்ள ஐபோன் உற்பத்தியை, பல நாடுகளுக்கும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவை அதன் உற்பத்தி மையமாக மாற்ற முடிவெடுத்துள்ளது. அதனை அடுத்து, டாடா குழுமம், தைவானின் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து, ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது, வேதாந்தா நிறுவனம் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு, அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் தொலைக்காட்சிக்கான டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன் மையம் போன்றவற்றை அமைக்க, வேதாந்தா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், இதற்காக, 1.54 லட்சம் கோடி ரூபாயை வேதாந்தா குழுமம் முதலீடு செய்துள்ளதாகவும் அறிவித்தது. அத்துடன், வேதாந்தா குழுமம், இதற்காக, தைவானின் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்தக் கூட்டணியில், 60 சதவீத பங்குகள் வேதாந்தா குழுமத்திற்கும், 40 சதவீத பங்குகள் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கும் சொந்தமாகும். மேலும், மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் செயல்படும் நான்காவது நிறுவனமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.