தமிழகத்தில் புதிய வாகனங்களுக்கான வரிகள் நவம்பர் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுகின்றன.தமிழக சட்டப்பேரவையில் புதிய வாகனங்களுக்கான வரிகளை உயர்த்தும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒரு லட்ச ரூபாய் வரையிலான வாகனங்களுக்கு வாழ்நாள் வரி 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே, ஒரு லட்சத்துக்கு மேலான தொகை உள்ள வாகனங்களுக்கு 12% வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது. மேலும், வாகனங்களின் சாலை பாதுகாப்பு வரியும் உயர்த்தப்படுகிறது. அதன்படி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு 2250 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 3000 ரூபாயும் வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெருநகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயர்வு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இது தவிர, கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், வாடகை வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் ஆகியவற்றின் வரிகளும் தனித்தனியே உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான கட்டண பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














