விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை என்ற பகுதி உள்ளது. வைப்பார் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள இந்த பகுதியில், இரும்பு காலம் மற்றும் வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் தொல்லியல் ஆராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேட்டில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
வெம்பக்கோட்டை பகுதியில் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இந்த பகுதியில் இருந்து, பகடை காய்கள், கல்மணிகள், காதணிகள், சக்கரங்கள், முத்திரைகள், சுடுமண் உருவங்கள், சங்கு வளையல்கள், சுடுமண் பந்துகள், கல்பந்துகள், சுடுமண் விளையாட்டு பொருட்கள், அரவைகள், கற்கோடாரி, சுடுமண் அச்சுகள் உள்ளிட்ட 3254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது, தங்கத்தால் ஆன காதணி மற்றும் தகடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை 2 கிராம் எடையுள்ளதாக உள்ளது. பொதுமக்கள் இவற்றை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.