விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் இல்லாத காரணத்தினால் விஸ்டாரா நிறுவன விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன.
இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான விஸ்டாரா நிறுவனங்களில் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இல்லாத காரணத்தினால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான பயணிகள் தினம் தோறும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதில் பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்தலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தினம்தோறும் இவ்வாறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் விமான போக்குவரத்து இயக்குனரகம் தினசரி ரிப்போர்ட் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று மட்டும் விஸ்டாரா 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து விஸ்டாரா செயல்பட்டு வரும் நிலையில் விமானிகள் பிரச்சனை தொடர்பாக தற்காலிக விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இன்று மட்டும் மும்பை, டெல்லி, பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய 38 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.














