ரஷ்யா அதிபர் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் 80 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனை அடுத்து அவர் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் ஏற்கனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய உள்ளார். கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்நாட்டில் புதினுக்கு எதிராகவோ அல்லது உக்ரைன் போர் குறித்து பொதுவெளியில் விமர்சிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. புதினை தீவிரமாக எதிர்த்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவாலினி கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதே போலவே புதினின் பிற எதிர்ப்பாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். இதனால் இவருக்கு பிரதானமாக எதிர்த்துப் போட்டிட ஆளில்லாத சூழலே அங்கு நிலவியது. வாக்குப்பதிவு நேரடியாகவும் இணையம் வழியாகவும் நடைபெற்றது.
உக்ரைனிடமிருந்து வலுக்கட்டாயமாக ரஷ்யா உடன் சேர்க்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பல வாக்கு சாவடிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வீசிய பெண் கைது செய்யப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாடுகளிலும் கூட அதிபர் புதினுக்கு எதிராக பெர்லின், பாரிஸ், மிலான் போன்ற நகரங்களில் ரஷ்ய தூதரகங்களுக்கு வெளியே ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெர்லினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நவாலினியின் மனைவி யூலியா நவால்நயா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.














