நைஜர் நாட்டில், ராணுவ புரட்சி நிகழ்ந்து ஆட்சி கைப்பற்றப்பட்ட பிறகு, அங்கு தொடர்ந்து அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், மீண்டும் முகமது பாசுமை ஆட்சி பொறுப்பில் அமர்த்த அண்டை ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அதன்படி, எகோவாஸ் எனப்படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, நைஜர் மீது படையெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், போரை தவிர்க்கும் முயற்சியாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட எகோவாஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நைஜர் நாட்டின் அண்டை நாடான நைஜீரியாவின் முன்னாள் அதிபர் அப்துல்சலாமி அபூபக்கர் தலைமையில், சனிக்கிழமை அன்று, எகோவாஸ் பிரதிநிதிகள் நைஜருக்கு சென்று இராணுவத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நைஜர் நாட்டை பொறுத்தவரை, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அதன் பெயரில், ஆட்சித் தலைமை பொறுப்பில் முகமது பசும் அமர்த்தப்பட்டார். அது நிகழ்ந்து சில மாதங்களிலேயே, ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஐநா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில், பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.