ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் எச்சரித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு, இல்லீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் மருத்துவர் இல்லாததால், 'வீடியோ' அழைப்பு வாயிலாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பணியில் இல்லாத மருத்துவர் பாலு, செய்யாறு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இரண்டு செவிலியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மருத்துவர்கள் கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், அவசர அழைப்புக்கு ஏற்ப மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வரும் தொலைவில் இருப்பதும் அவசியம். அவ்வாறு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மருத்துவ பரிந்துரைகளை வழங்கினாலும், பிரசவம் பார்த்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று நடந்தால் '104' என்ற மருத்துவ மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். இதுகுறித்த அறிவுறுத்தல்கள், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் வாயிலாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விதிகளை மீறி பணியை புறக்கணிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.