மின்சாரமின்றி இயங்கக்கூடிய வகையில், மலிவு விலையில் உருவாக்கப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தை பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பொறியாளர் நவ்ஜோத் சாஹ்னி வடிவமைத்துள்ளார். அவரது முயற்சியை பாராட்டும் வகையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அவருக்கு 'பாய்ண்ட்ஸ் ஆப் லைட்' என்ற விருதை வழங்கி உள்ளார். மேலும், இது தொடர்பாக அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளார்.
ரிஷி சுனக் அனுப்பிய பாராட்டு கடிதத்தில், "மின்சார துணி துவைக்கும் எந்திரத்தை வாங்க இயலாத உலகின் பல நாடுகளில் உள்ள மக்களுக்கு, இந்த கண்டுபிடிப்பு மூலம் பலன் கிடைக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்துள்ளன. மேலும், பல்வேறு உலக நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உக்ரைன் நாட்டின் நிவாரண மையங்களில் உள்ள மக்கள் இந்த எந்திரத்தை பயன்படுத்தி வருவது சிறப்புக்குரிய விஷயம் ஆகும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய நவ்ஜோத், பிரதமரின் விருதை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த இயந்திர உருவாக்கத்தில் துணை புரிந்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.