விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல் கல்லாக, விண்கற்களின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சூரிய குடும்பத்துக்குள் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா மற்றும் ஜெர்மன் ஏரோஸ்பேஸ் சென்டர் ஆகியவை இணைந்து சோபியா என்ற தொலைநோக்கியை இயக்கி வருகின்றன. அதை பயன்படுத்தி ஐரிஸ் மற்றும் மலிசா ஆகிய விண்கற்களை ஆய்வு செய்தபோது, அவற்றின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலிக்கா நிறைந்த இந்த விண்கற்களில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதே சோபியா கருவி, நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் உள்ளதை இதற்கு முன்னால் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. ‘தி பிளானட்ரி சயின்ஸ் ஜர்னல்’ என்ற இதழில், அனிசியா அரடோன்டோ என்பவர் விண்கற்களில் தண்ணீர் கண்டறியப்பட்டதை குறித்து விவரித்து எழுதி உள்ளார்.