வயநாடு நிலச்சரிவினை அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரால் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், மேலும் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. முண்டகை, சூரல்மலை, மேம்பாடி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மாநிலங்கள் நிதியுதவிகளை வழங்கின. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் உதவி வழங்கியது. கேரள அரசு, இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கக் கேட்ட நிலையில், மத்திய அரசு அதனை அதி தீவிர பேரிடராக அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்புடன் கேரள மாநிலத்துக்கான சிறப்பு நிதி உதவியொன்றும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.