கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்கவும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப். 7 ரக கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் பரவினாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பரிசோதனை முறையை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பு, அதன் விலை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். முன்கள பணியாளர்கள் முன்பு அயராது பணியாற்றியது போல் இம்முறையும் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.