ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, என் ஜி சி 7469 விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திரத்தின் ஆறு புள்ளிகளை மிகத் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், “பிரகாசமான விண்மீன் கருப்பகுதியை இந்த புகைப்படம் காட்டுகிறது. விண்மீன் மையப் பகுதியில், தூசி மற்றும் வாயுவால் வெளிப்படும் ஒளி பிரகாசமாக மின்னுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் தொடர்பான நட்சத்திர புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தப் புகைப்படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
மேலும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளது. அத்துடன், டிசம்பர் 20ஆம் அன்று, அதில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இதனால் விண்வெளி ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.