பயனர்களின் வசதியை அதிகரிக்கும் பொருட்டு, வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை வாட்ஸ் அப் புதிய வெளியீடுகளை தெரிவிக்கும் WaBetaInfo வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் முகப்பு படத்தை (DP) , தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும், இல்லாதவர்களுக்கு வேறு விதமாகவும் வைத்துக் கொள்ளும் புதிய அம்சம் வெளியாக உள்ளது. பயனர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப் தளத்தில் பகிரப்படும் வீடியோக்களை, ஃபார்வர்டு மற்றும் பேக்வேர்ட் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. யூட்யூப் தளத்தில் வீடியோக்களை வலது அல்லது இடது புறமாக இரு முறை தட்டினால், ஃபார்வர்டு மற்றும் பேக்வேர்ட் செய்யப்படும். கிட்டத்தட்ட அதேபோன்ற அம்சம் வாட்ஸ் அப் வீடியோக்களில் வெளியாக உள்ளது. தற்போதைய நிலையில், குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சங்கள் வெளிவந்துள்ளன. பரிசோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகு, இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














