பயனர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ் அப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ் அப் வீடியோ காலில், ‘ஸ்கிரீன் ஷேரிங்’ அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு 2.23.11.19 வெர்ஷனில் இந்த புதிய அம்சத்தை பெற முடியும் என்று, வாட்ஸ் அப் மேம்படுத்தல்களை வெளியிடும் WABetaInfo தெரிவித்துள்ளது. மேலும், பழைய ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களில் இந்த ஸ்கிரீன்ஷாட் வசதி இடம்பெறாது என கூறியுள்ளது. அத்துடன், பல பேர் பங்கேற்கும் வீடியோ கால் அழைப்புகளில், ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் கொடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தி உள்ளது.
WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்கள் படி, பயனர், வீடியோ அழைப்பின் எந்த ஒரு நேரத்திலும், தங்கள் கைபேசி டிஸ்ப்ளேவை ஷேர் செய்ய முடியும் எனவும், அழைப்பின் எந்த நேரத்திலும் அதனை துண்டித்துக் கொள்ள முடியும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோ கால் அழைப்புகளில் ஷேர் செய்யப்படும் டிஸ்ப்ளேவை, ரெக்கார்ட் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், ஸ்கிரீன் ஷேர் செய்யும் நபரின் ஒப்புதலை பெற்ற பிறகு ரெகார்ட் அம்சம் செயலாகும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் WABetaInfo தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.