கடந்த ஜூன் 6 முதல் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், பூமிக்கு திரும்புவதற்கான பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க தடையும், முடிவெடுக்கும் சவாலும் எழுந்துள்ளது. போயிங்கின் ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் ஆகியவற்றில் எதில் அவர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதை ஆகஸ்ட் 24 அன்று நாசா அறிவிக்கவுள்ளது.
ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் த்ரஸ்டர் தோல்விகள் மற்றும் ஹீலியம் கசிவுகள் போன்ற பல தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் பல வெற்றிகரமான பறத்தல்களை நிறைவேற்றியுள்ள போதிலும், SpaceX Crew-9 பணியின் தாமதம் காரணமாக விண்வெளி வீரர்களின் திரும்புதல் பிப்ரவரி 2025 வரை தள்ளிப்போகலாம். எனவே, இத்தகைய இக்கட்டான சூழலில், நாசா எடுக்கும் முடிவு, எதிர்கால விண்வெளி பயணங்களின் பாதுகாப்பு மற்றும் வணிக விண்வெளித் துறையின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.