சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ் ஈஸ்வரன் ஆவார். அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
அமைச்சர் ஈஸ்வரன் மீது ஊழல் புகார்கள் வந்ததை அடுத்து, அவரை பதவியிலிருந்து விலகுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீசன் லூங் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினர், ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ஈஸ்வரன், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் அவருக்கு, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தியதில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்த ஊழல் விசாரணை அவருக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது.