விக்கிபீடியாவில் காணப்படும் மத நிந்தனை கருத்துகளால், பாகிஸ்தானில் இந்த தளம் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் தொலைதொடர்பு ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மலஹத் ஒபைட், "விக்கிபீடியா தளத்தில் மதநிந்தனை கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதனை நீக்க வலியுறுத்தி விக்கிபீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், விக்கிபீடியா தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விக்கிப்பீடியா கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, தளம் முடக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
விக்கிமீடியா அறக்கட்டளையால் இயக்கப்படும் விக்கிபீடியா தளம், உலகளாவிய முறையில் பிரபலமான தகவல் களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், "விக்கிபீடியா தளத்தில் இடம்பெறும் உள்ளடக்கம் பலரால் ஒருங்கிணைக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெற வேண்டிய உள்ளடக்கம் குறித்த முடிவுகள் அறக்கட்டளையால் எடுக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில் இந்த தளம் முடக்கப்பட்டதால், மாபெரும் இலவச அறிவு களஞ்சியத்திற்கான அணுகல் பாகிஸ்தான் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் பாகிஸ்தானின் வரலாறு, கலாச்சாரத்தை அணுகுவது தடைப்படும். அறிவு என்பது மனிதனுக்கான உரிமை என்ற எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் விரைவில் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்" என்று விக்கிமீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.