வட மேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காட்டுத் தீயை அணைப்பதில் அல்ஜீரியா தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டு தீ, காற்று காரணமாக அண்டை நாடான துனிசியாவிலும் பரவி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், காட்டு தீ சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடுமையான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 90க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலான பகுதிகளில் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வெப்ப அலை நீடிப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.