லண்டனில் இன்று தொடங்கும் 2025 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஹாட்ரிக் வெற்றிக்காக அல்காரஸ் மற்றும் தனது முதல் பட்டத்திற்காக சின்னர் பரபரப்பான போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் 2025 இன்று லண்டனில் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 7 முறை கோப்பையை கைப்பற்றிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பையை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை வென்றால் விம்பிள்டனில் ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றிபெற்று, பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியிலும் கலந்து கொண்ட சின்னர், சிறப்பான பார்மில் உள்ளார். இந்த முறை அவர் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.