செவ்வாய் கிரகத்தில் தற்போது குளிர் காலம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகம், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வர, மொத்தம் 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதனால், அங்கு நீண்ட குளிர்காலம் ஏற்படுகிறது. இந்தக் காலங்களில், செவ்வாய் கிரகத்தின் துருவப் பகுதிகளில் மைனஸ் 123 டிகிரி செல்சியஸ் வரை குறைவான வெப்பநிலை பதிவாகும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சமயங்களில் அங்கு காணப்படும் பனிக்கட்டிகளின் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இரண்டு விதமான பனிக்கட்டிகள் காணப்படுகின்றன. ஒன்று பூமியில் உள்ளதை போன்று, நீர் உறைவதால் ஏற்படும் பனிக்கட்டி. ஆனால், செவ்வாய் கிரக சூழலின் படி, நீர் உறைவதற்கு முன்பே ஆவியாகிவிடும். மற்றொரு பனிக்கட்டி வகை, கரியமில வாயு அடிப்படையிலானது. இவ்வாறான பனிக்கட்டிகளே துருவப் பகுதிகளில் அதிகமாக தென்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.