விப்ரோ நிறுவனத்தில், புதிதாக பணியில் சேர்ந்த பயிற்சி பணியாளர்கள், நிறுவனம் நடத்திய திறனறி தேர்வுகளில், தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 452 பயிற்சி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க, ஒவ்வொரு பணியாளருக்கும் தலா 75000 ரூபாய் செலவிட்டதாக தெரிவித்த விப்ரோ நிறுவனம், திறன் வாய்ந்த பணியாளர்களை கண்டறிந்து பணியில் அமர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதன் பகுதியாகவே, திறமை இல்லா பணியாளர்கள் பயிற்சியில் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த வருடம், விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வேறொரு வேலையில் ஈடுபட்ட 300 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திறமையற்ற பணியாளர்களை ஆரம்ப நிலையிலேயே பணி நீக்கம் செய்துள்ள விப்ரோவின் நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.