கடந்த வார இறுதியில், ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ப்ளூ பேட்ச் சேவை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, பிரபல திரைப்பட பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியவர்களின் கணக்குகளில் இருந்து ப்ளு பேட்ச் அகற்றப்பட்டது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பாலோயர்களை கொண்ட ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ பேட்ச் சேவை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ பேட்ச் திருப்பி வழங்கப்பட்டது குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பத்திரிக்கையாளர் ராணா ஆயூப், அமெரிக்க எழுத்தாளர்கள் கரா சுவிஷேர், ஸ்டீபன் கிங் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர். பல பிரபலங்கள், தங்களுக்கு ப்ளூ பேட்ச் வழங்கப்பட்டதை ட்விட்டரில் வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எலோன் மஸ்க் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














