இஸ்லாமிய நாடான ஈரானில், பெண்களுக்கான அடக்குமுறைகள் மற்றும் ஆடை கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம். அந்த நாட்டில் ஹிஜாப் அணியாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி, தெஹ்ரான் நகரில் மாஷா அமினி என்ற 22 வயது பெண், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டார். காவலில் இருந்தபோது, அவர் கடுமையாக தாக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் இருந்து, மாஷா அமினிக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு நோய் இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால், அவர் 3 நாட்கள் கோமா நிலையில் இருந்து, பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் இந்த விளக்கங்களை அந்தப் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர். உயிரிழந்த மாஷா அமினியின் தந்தை, அவரது இறுதிச் சடங்கில், இஸ்லாமிய மதகுருவை எதிர்த்து பேசிய காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், “இரண்டு முடிகள் வெளியே தெரிந்ததற்காக எனது மகள் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு இஸ்லாமே காரணம்” என்று கூறியுள்ளார். இந்நிலையில், மாஷாவின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவதற்கு 3 வார காலம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் ஈரானில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து, பல பெண்கள் தற்போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தீவிர போராட்டத்தில் ஈரான் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தை ஈரான் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அத்துடன், ராணுவத்தையும் இந்த நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் பெண்களின் தற்போதைய போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.