கார்பன் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இந்தியா பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான பசுமை எரிசக்தி திட்டத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்க உள்ளது. உலக வங்கியின் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கி உள்ளனர். இதன் மூலம், இந்தியாவின் புத்தாக்க எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்படும் என்று நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் ஜீரோ இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்தியாவின் இந்த பயணத்திற்கு வலு சேர்க்கும் முறையில், பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதன் மூலம், தற்போதைய நிலையில், இந்தியாவின் கார்பன் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாக, பசுமை எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற, இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் வழங்கப்படுவதாக” கூறப்பட்டுள்ளது.