உலக வங்கி அக்டோபர் 6ம் தேதி, தெற்காசியாவின் பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்த நிலையில், தற்போது அதனை ஒரு சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பதே வளர்ச்சி விகிதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில் 7% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 6.1% ஆகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அத்துடன், தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் ஒரு சதவீதம் குறைத்து 5.8 சதவீதமாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகிய காரணங்களால் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தெற்காசியா பிரிவு துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் இதுகுறித்து கூறியதாவது: “பணக் கொள்கை அடிப்படையில் விவேகமானச் செயல்பாடுகளால், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியும். இந்தியா, தெற்காசியாவின் மாபெரும் பொருளாதாரம் ஆகும். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையை அடைந்துள்ளது” என்று கூறினார்.
இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையின் ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில், மேலும் 4.2% குறையும் என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை, நிலைத் தன்மையற்றதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேபால், மாலத்தீவுகள் உள்ளிட்ட சிறிய நாடுகளைப் பொறுத்தவரை, சுற்றுலா துறையின் மீட்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் தெற்காசியா பிரிவு தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் ட்ரிம்மர் கூறியதாவது: “தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்கள், பொதுமக்களுக்கு வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை விரிவுபடுத்துதல், சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல், போன்றவற்றால், தெற்காசியாவின் கிராமப்புறங்களில், சரியும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என்று கூறினார்