டெல்லி ரயில் நிலையம் உலக தரத்துக்கு மறுவடிவமைக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் தலைநகரில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாக டெல்லி ரயில் நிலையம் உள்ளது. 16 நடைமேடைகள் கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த பற்றிய 2 படங்களை ட்விட்டரில் ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தப் படங்கள் பகிரப்பட்ட சிலமணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.
இரண்டு குவிமாடம் போன்ற கட்டமைப்புடன் இதன் வடிவமைப்பு உள்ளது. கட்டிடங்களில் கண்ணாடிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்துக்கு செல்லவும் வெளியேறவும் சுற்றிலும் மேம்பாலங்கள் உள்ளன. மேலும் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலமும் இதில் உள்ளது. வெளியே பசுமைப் பகுதியும் புதிய வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளது.
இத்திட்டத்துக்கு அதிக நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதால் அதில் சவால்கள் உள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். கோடைக்காலத்தில் டெல்லியில் வெயில் கொளுத்தும் என்பதால் கண்ணாடிகள் பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், புறநகர் ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் புறக்கணிப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.