சர்வதேச அளவில் சிறப்பான பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘டைம் அவுட்’ என்ற ஊடகத்தில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மனியின் பெர்லின் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து, செக் குடியரசின் தலைநகர் பிரேக் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில், ஜப்பானின் டோக்கியோ நகரம் இடம் பிடித்துள்ளது. மேலும், முதல் 10 இடங்களுக்குள் 5 ஆசிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் மும்பை நகரம் இந்த பட்டியலில் 19 ஆம் இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் பிரபலமான 50 நகரங்களில் உள்ள 20000 மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெர்லின் நகரின் பொது போக்குவரத்து அமைப்பை 97% மக்கள் பாராட்டி உள்ளனர். குறிப்பாக, மெட்ரோ திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல, மும்பை நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள புறநகர் ரயில்வே அமைப்பு நகரின் போக்குவரத்தை எளிதாக்கும் முக்கிய அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. மும்பை மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 81% மக்கள், மும்பையில் பொதுப் போக்குவரத்து எளிமையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.