உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக அமெரிக்காவின் பென்டகன் கட்டிடம் கருதப்படுகிறது. இந்நிலையில், பென்டகனை விட அளவில் பெரியதாக, இந்தியாவில் புதிய அலுவலக கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், வைர வியாபாரம் தொடர்பான வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் திறக்கப்பட உள்ள இந்த கட்டிடமே, உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக வரலாற்றில் இடம் பிடிக்க உள்ளது.
சுமார் 35 ஏக்கரில், கடந்த 4 ஆண்டுகளாக, ‘வைர வர்த்தக மையம்’ கட்டப்பட்டுள்ளது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வைர விற்பனை ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் படி இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மாடிகளைக் கொண்ட, 9 செவ்வக வடிவ அமைப்புகள் இந்த கட்டிட வளாகத்தில் உள்ளன. இதில், 4200 அலுவலகங்கள் செயல்பட முடியும் எனவும், கிட்டத்தட்ட 65000 பேர் பணியாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், வர்த்தக நிமித்தமாக வைர வியாபாரிகள் மேற்கொள்ளும் பயணங்கள் பன்மடங்கு குறையும் என கூறப்படுகிறது.














