மல்யுத்த வீராங்கனைகள் மீது பாஜக எம்பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த வாரம் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டனர். பல கோரிக்கைகளுக்குப் பிறகு, பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து, 5 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கெடு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு, மல்யுத்த வீரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தில்லியில், சுமார் 2 மணி நேரத்திற்கு நடந்த இந்த சந்திப்பில், பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.