எஸ் பேங்க் நிறுவனம், சர்வதேச தனியார் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனங்களான Carlyle Group மற்றும் Verventa Holdings நிறுவனங்களுக்கு தலா 10% பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது. இதற்கான ஒப்புதலை காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா தற்போது வழங்கியுள்ளது. எனவே, மொத்தமாக, 20% எஸ் வங்கி பங்குகள் சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட உள்ளன. முன்னதாக, ஜூலை மாதத்தில் இந்த நிறுவனங்களின் மூலம் 8898 கோடி ரூபாய் நிதியை எஸ் பேங்க் பெற்றிருந்தது. அதன் வழியாக, தனது பங்குகளை நிறுவனங்களுக்கு விற்க திட்டமிட்டு இருந்தது.
இந்த இரு தனியார் முதலீட்டு நிறுவனங்களின் மூலம், அதிக அளவு நிதியைத் திரட்ட எஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்திய தனியார் நிறுவனம் ஒன்றில், இத்தகைய பெரும் தனியார் முதலீடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம், நீண்ட கால வளர்ச்சி இலக்குகளை எட்ட முடியும் என்று எஸ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், Carlyle Group மற்றும் Verventa Holdings நிறுவனங்களுக்கு, சுமார் 1.84 பில்லியன் ஈக்விட்டி பங்குகளை விற்க எஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 13.78 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, நிறுவனத்தின் வணிக முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.