இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இடம் பெற இயலவில்லை. அதற்கு முக்கிய காரணம் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கியிருப்பது என்றார்.
இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம் என்றும், அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும் என்றும் அவர் கூறினார். சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்களில் இருந்து காணொலி காட்சி வழியாக மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.














