நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியாவில் நடைபெறுகிறது. உக்ரைன் ரஷ்யா போர், ஸ்வீடனுக்கு நேட்டோ அமைப்பில் இடம் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இந்த 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காட்டம் தெரிவித்துள்ளார்.
நேற்று, இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், “நேட்டோ தனது ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை இணைத்துக் கொள்ளவும், அதற்கான அழைப்பை விடுக்கவும் தயாராக இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இது மிகவும் தவறான செயல்” என்று பதிவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்த காரணத்தினாலேயே தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேட்டோ அமைப்பும் உக்கரைனை இணைப்பது தொடர்பாக எந்த முன்னேற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே, ஜெலன்ஸ்கி இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த வேளையில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.














