ஜீரோதா பங்குச் சந்தை தரகு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத். அவர், தற்போது, மத்திய அரசின் புத்தாக்க நிறுவனங்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆலோசனைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் உறுப்பினராக நிதின் காமத் நியமிக்கப்படுவதாக டிசம்பர் 18 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதின் காமத் இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தற்காலத்தில் அதிகமான இந்திய இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக, சரியான நேரத்தில், மத்திய அரசு புத்தாக்க நிறுவனங்களுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.” என்று கூறியுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மூலம், தற்சார்பு இந்தியாவுக்கான இலக்குகள் விரைவில் கட்டப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.