ஜோமாட்டோ நிறுவனத்தின் இணை நிதி தலைமை அதிகாரியாக இருந்த நிதின் சாவாரா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜோமாட்டோவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிதித் துறையின் இணைத் தலைமை அதிகாரியாக நிதின் சாவாரா பொறுப்பேற்றார். எர்னஸ்ட் அண்ட் யங் என்ற பன்னாட்டு தொழில்முறை சேவைகள் வழங்கும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த அவர், ஜோமாட்டோவில் இணைந்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளார். குறிப்பாக, அவர் பொறுப்பில் இருந்த பொழுது, விரைவு வர்த்தக நிறுவனமான பிளிங்க்கித், ஜோமாட்டோ உடன் இணைக்கப்பட்டது. பிளிங்க்கித் நிறுவனத்தை சுமார் 4447 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியதில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தனியாகத் தொழில் தொடங்கும் நோக்கத்துடன் அவர் ஜோமாட்டோவில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைவர் தீபேந்தர் கோயல், “அவர் மனதில் இருக்கும் புதிய தொழிலை செயல்படுத்துவதில் அவர் முனைப்புடன் உள்ளார். அதனால், அவர் விலகுகிறார். இந்தியாவில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்” என்றார். இதிலிருந்து, அவரது விலகல் நிறுவனம் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.














