பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஜொமாட்டோ தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ஏழு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பலமுறை ஜொமாட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை, செயல்பாட்டுச் செலவுகளை ஈடு கட்டும் பொருட்டு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 36 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த Zomato, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 176 கோடி ரூபாய் என்கிற கணிசமான லாபத்தை பதிவு செய்துள்ளது. வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்து 4,799 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மொத்த செலவுகள் 4,783 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு 8,500 கோடி ரூபாய் நிதியை தகுதிவாய்ந்த நிறுவனங்களின் மூலம் திரட்டவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.














