கடந்த மார்ச் மாதம், ஜோமாட்டோ நிறுவனம், ஜோமாட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் 10 நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் சேவையை அறிமுகம் செய்தது. இந்த வர்த்தகத்தை தற்போது நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், "ஜோமாட்டோ இன்ஸ்டன்ட் வர்த்தகம் லாபகரமாக மாறும் என்பதில் நம்பிக்கை இல்லை. அத்துடன், எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் அதன் வர்த்தகம் முன்னேறவில்லை. எனவே, அதனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த வாரத்தில், ஜோமாட்டோ நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். அதன்படி, குறைந்த விலையில் காம்போ உணவுகள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், ஜோமாட்டோ இன்ஸ்டன்ட் சேவை நிறுத்தப்படுவதற்கு பதிலாக, அதில் புதிய வகை உணவுகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜோமாட்டோ நிறுவனத்தின் பிரபல சந்தா திட்டமான ஜோமாட்டோ கோல்ட் மீண்டும் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














