பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ, நேற்று தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர இழப்பு 360 கோடியிலிருந்து 188 கோடியாக குறைந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 74% உயர்ந்து, 2056 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் இழப்பு 1209 கோடியில் இருந்து 971 கோடியாக குறைந்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 69% உயர்ந்து, 7079 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
துறைவாரியாக, உணவு விநியோக வர்த்தகத்தில் 1530 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் B2B வர்த்தகத்தில் 478 கோடி வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிளிங்கிட் மற்றும் துரித வர்த்தக பிரிவில் 363 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், உணவு வினியோக வர்த்தகத்தில் மொத்த ஆர்டர்கள் மதிப்பு 6569 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல், கடந்த 5 காலாண்டுகளாக, உணவு விநியோக வர்த்தகத்தில் கணிசமான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மகிழ்ச்சி தெரிவித்தார்.