செமி கண்டக்டர் (Semiconductor) வரவு அதிகரித்ததால், இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டை விட 11% சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் (SIAM) கூறியுள்ளது.
இந்த ஜூலை மாதத்தில், விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 293865 என்று சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 264442 ஆக இருந்துள்ளது. குறிப்பாக, கடந்த வருடத்தில் 130080 பயணிகள் கார் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் 143522 பயணிகள் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது பத்து சதவீத உயர்வாகும். மேலும், கடந்த ஆண்டு, 124057 ஆக இருந்த பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை, இந்த வருடம் 11% உயர்ந்து, 137104 ஆக உள்ளது. பயணிகள் பயன்பாட்டிற்கான இரண்டு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மொத்த உற்பத்தி, இந்தக் காலாண்டில் 8276268 ஆக அதிகரித்துள்ளதாக சியாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சியாம் அமைப்பின் பொது நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன், "இந்த ஜூலை மாதத்தில், 2.9 லட்சம் 4சக்கர வாகனங்கள், 13.8 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 31000 3சக்கர வாகனங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும், இருசக்கர வாகனங்கள் விற்பனை, கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 2006 ஆம் ஆண்டை விடவும் குறைவாகவே பதிவாகி உள்ளது. மேலும், இந்த ஆண்டில் 3 முறை ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனக் கடன் வட்டியும் அதிகரித்துள்ளது. எனவே, புதிதாகச் சந்தைக்கு வரும் வாகனங்களின் விற்பனை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார். அத்துடன், சிஎன்ஜி வாகனங்களுக்காக உள்நாட்டிலேயே எரிவாயுவை ஒதுக்கியதற்கு, இந்திய அரசிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.