பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணைவேந்தர்கள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது
உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013ல் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன், தனியார் பல்கலைக்கழகமாக இருந்தது. அப்போது, 1,573 பேராசிரியர்கள், 4,277 பணியாளர்கள், தேவைக்கு அதிகமாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, அந்த பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்டது.
பின், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சிக்கல், நிதி பிரச்னை ஏற்பட்டது. அதனால் 1,204 ஆசிரியர்கள் மற்றும் 3,246 பணியாளர்கள் அரசின் வேறு துறைகளில் மாற்று பணிக்கு அனுப்பப்பட்டனர். மேலும், அரசின் புதிய கலை அறிவியல் கல்லுாரிகளில் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக அடிப்படையில், 417 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளத்துக்கு, அரசின் சார்பில், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், பாடத் திட்டங்களை சீரமைப்பது தொடர்பாக, வரும் 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணை வேந்தர்களை அழைத்து, கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.