புதுச்சேரியில் வரும் நிதியாண்டில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கலாகும். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கலாவதில்லை. இடைக்கால பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தான் முழு பட்ஜெட் தாக்கலாகிறது. தற்போதைய பட்ஜெட் கூட்ட தொடர் 6 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற கூட்ட தொடரில், பாஜக உறுப்பினர் கல்யாண சுந்தரம், திமுக எம்எல்எ சம்பத், எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வலியுறுத்தினார்கள்.
அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, அடுத்த நிதியாண்டில் மார்ச் மாதமே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். அப்போது கூட்ட நாட்களும் அதிகளவு நடைபெறும். அந்த கூட்டத்தில் உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள் என்று அவர் கூறினார்.
மேலும் தற்போது 31ம் தேதிக்குள் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதால் கூட்டத் தொடர் நாட்களை குறைவாக வைத்துள்ளோம். மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாகும். தற்போதைய பணிகளை ஆறுமாதங்களில் முடிக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.