ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 100 டன் தங்கம் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த தங்கம் இந்தியாவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான தங்கத்தின் ஒரு பகுதி இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச பங்கீட்டு வங்கி ஆகியவற்றில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, இங்கிலாந்து வங்கி வசம் இருந்த 100 டன் தங்கம் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, தங்கத்தை பாதுகாப்பதற்காக வங்கிக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் சேமிக்கப்படுகிறது. கடந்த 1991ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது, மத்திய ரிசர்வ் வங்கி 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து மற்றும் ஜப்பான் வங்கிகளில் அடகு வைத்திருந்தது. தற்போது, இந்த தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டிடம் ஆகியவற்றில் இந்த தங்கம் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கம் கையிருப்பு 822.10 டன் ஆகும்.