குஜராத்தில் ரூ.13,000 கோடியில் மின் வாகன பேட்டரி ஆலை அமைக்க மாநில அரசு, டாடா குழுமம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
காரியமில வாயு வெளியேற்றத்தை 2070-க்குள் பூஜ்ஜிய நிலைக்கு குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் டாடா குழுமத்தின் டாடா அகரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொலூஷன்ஸ் நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் கடந்த வாரம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மின் வாகன பேட்டரி தொழிற்சாலை நிறுவப்பட்டு லித்தியம்-அயன் செல்கள் தயாரிக்கப்படும்.
இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 13 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் லித்தியம் பேட்டரி உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கும். கடந்த 2021-ல் இந்தியாவின் மின்வாகன சந்தை மதிப்பு ரூ.3,169 கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல்ரூ.12.58 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.7,680 கோடி மதிப்பிலான 45 கோடி லித்தியம் பேட்டரிகளை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.