திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் ரூ.155 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருந்து பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.51.56 கோடியும், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டு, பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளன.
இப்பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த மருத்துவப் பூங்கா திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.