பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ், நோபல் பரிசு வென்றவர். அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அவர் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறு 170 உலகத் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, முன்னாள் அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நோபல் பரிசு வென்றவர்கள் இது குறித்து முறையிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.“முகமது யூனுஸ் மனிதநேயமிக்கவர். அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதற்காக நடைபெறும் பிரச்சாரத்தில், என்னோடு இணைந்துள்ள 160 உலக தலைவர்களுடன் நீங்களும் இணைந்து கொள்வீர்களாக” என கிளிண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி பணம் மற்றும் நோபல் பரிசை அவர் பெற்றதாகவும், தனது புத்தகத்துக்கான அங்கீகாரம் பெற்றதாகவும் முகமது யூனுஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் சட்டங்களை அவர் மீறியதாக அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள், நாட்டுக்கு அழிவை தருவதாக முகமது யூனுஸ் அவற்றை கண்டித்து வருகிறார். இதற்கிடையே, சர்வதேச அளவில், அவருக்கான ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன.














