இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனாவைச் சேர்ந்த 17 பொதுமக்களை கொன்றுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனாவைச் சேர்ந்த 17 பொதுமக்களை கொன்றுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதல் காசா பகுதியில் நடந்துள்ளது. மேலும், இடிபாடுகளை அகற்றும் பணிகளில் பயன்படுத்தப்படும் புல்டோசர்கள் மற்றும் பிற கனரக வாகனங்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காசாவின் ஜபாலியா நகர நிர்வாகம் வெளியிட்ட தகவலில், “ஜனவரி மாதம் தொடக்கம் எகிப்தும், கத்தாரும் வழங்கிய புல்டோசர்கள், வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, காசா பகுதியில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, அங்கு உணவு, மருந்துகள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் தொட்டிகள், மொபைல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் உள்ளிட்ட சிவிலியன் உள்கட்டமைப்புகள் இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.