இந்திய சீன எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்த கருத்தை சீனா வரவேற்றுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா சீனாவால் முடியும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதனை சீனா வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த கருத்தை வலியுறுத்தினார். இந்தியா, சீனா இடையே அமைதியான மற்றும் ஸ்திரமான உறவு என்பது ஒட்டுமொத்த உலகுக்கு முக்கியமானது என்று கூறினார். இந்நிலையில்,மோடியின் கருத்துக்கு சீன அரசின் சீனா டெய்லி நாளிதழில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எழுதப்பட்ட தலையங்கத்தில் இரு தரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஊக்கம் அளிக்கும் இந்த முடிவு வரவேற்புக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சீன அரசின் செய்தி தொடர்பாளர் மாவோ, இந்தியா சீனா இடையேயான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் இடையே நன்மையை விளைவிக்கும். அதோடு அதைக் கடந்தும் பலன் தரக்கூடியது. இரு தரப்பும் இந்த எல்லை பிரச்சினையை பொருத்தமாக கையாள வேண்டும். இதை கையாள்வதில் தூதரகம், ராணுவ ரீதியில் இரு நாடுகளும் நல்ல தொடர்பை பேணி வருகின்றன. இதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகளை நீண்ட கால கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். இந்த விஷயத்தில் சீனாவுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என்று கூறினார்.
எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ராணுவ ரீதியாக இதுவரை 21 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. நான்கு இடங்களில் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எல்லையில் மேலும் சில பகுதிகளில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.