கனடாவில் விமான விபத்தில் இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உட்பட 3 பேர் பலியாகினர்.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் லாங்லியில் ஸ்கைகுவெஸ்ட் என்ற பெயரில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் நடக்கிறது. இங்கு விமான பயிற்சிக்காக அபை காத்ரு மற்றும் யாஷ் ராமு கடே என்ற இந்திய இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், இவர்களுடன் சேர்த்து மூன்று பேர் பி ஏ 34 செனிகா என்ற சிறிய ரக விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்திலிருந்து இவர்கள் புறப்பட்டு சிலிவாக் விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, விபத்தில் இறந்த விமானிகளின் உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு இறங்கியுள்ளது.