சென்னையில் புயல் பாதிப்புகளை நேரலையில் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர்கள் பருவமழையை எதிர்கொள்ள நிரந்தரமான கட்டுப்பாட்டு அறை ஒன்று சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் பொருத்தப்பட்டுள்ள 650 கேமராக்கள் இந்த கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுரங்கப்பாதைகள், கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் 38 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெருமழையால் ஏற்படும் வெள்ளபாதிப்புகள், ஏரிகளின் நீர்மட்டம் மற்றும் புயல் பாதிப்புகளை கட்டுபாட்டு அறையில் இருந்து நேரலையில் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். மேலும் புகார்கள் மீதும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள கட்டுபாட்டு அறையில் இருந்து வார் ரூமும் செயல்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அவசர காலங்களில் ஏற்படும் தெரு விளக்குகள் பழுது, மழைநீர் தேக்கம், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது, குடிநீர் வினியோகம் பாதிப்பு, மரம் விழுதல், மின்வெட்டு, மின்கசிவு போன்ற புகார்களை பதிவு செய்ய 1913, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்கள் மூலமாகவும், மாநகராட்சியின் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் பக்கம் வழியாகவும் பொதுமக்கள் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.














