ரஷ்யப்படைகள் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், உக்ரைனில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்கள் 8 மாதங்களாக நீடித்து வருகின்றன. சமீபகாலமாக ரஷ்யபடைகள் அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதாக நாட்டு அதிபர் ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். உக்ரைனின் முக்கியமான 3 மின் நிலையங்கள் ரஷியாவின் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 40% மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவை மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மின் நிலையங்களை மறுசீரமைத்து மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.














