சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் மூழ்கின.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சென்னையை ஒட்டி கரையை கடந்த நிலையில், சுமார் 65-85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. புயல் கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 100 விசைப்படகுகள் சேதமடைந்தது. மேலும் 50 விசைபடகுகள் நீரில் மூழ்கியுள்ளன. விசைப்படகுகள் மூழ்கியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்வளத்துறை இயக்குநர் பழனிசாமி, இணை இயக்குநர் ரீனா உள்ளிட்டோர் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர். படகில் வைக்கப்பட்டு இருந்த ஐஸ் பெட்டி, உணவு பொருட்கள், வலைகளும் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.